Saturday, July 15, 2006

காமராஜர் பெயரில் கல்வி ஆராய்ச்சி பல்கலை கழகம்: கருணாநிதி அறிவிப்பு

சென்னை, ஜுலை. 15-

பெருந்தலைவர் காமராஜரின் 104-வது பிறந்த தினவிழா சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நடந்தது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் எம்.கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார்.

முதல்-அமைச்சர் கருணாநிதி இதில் கலந்து கொண்டு பேசினார். அப்போது கூறியதாவது:-

இந்த விழாவில் நான் கலந்து கொள்வது பெருமை என்று கூறினார்கள். அதைவிட காமராஜர் பிறந்தநாள் விழாவுக்கு என்னை அழைத்ததை பெருமையாக கருதுகிறேன்.

அரசியலில் ஆயிரம் மாறுபாடுகள் இருந்தாலும், காமராஜர் அனைத்து கட்சியினருக்கும் அரசியலில் வழிகாட்டிய ஆசானாக இருந்தார். எத்தனை கருத்து வேறுபாடு, அரசியல் மாறுபாடு இருந்தாலும், அரசியல் காரணமாக விமர்சனம் செய்யும் சூழ்நிலை வந்தாலும் எனக்கும், தி.மு.க.வினருக்கும் காமராஜர் மீது தனி மரியாதை உண்டு.

எதிர்க்கட்சியாக இருந்தபோதும், சென்னை மாநகராட்சி தி.மு.க.விடம் இருந்த காலத்தில் அண்ணாவின் உத்தரவுப்படி காமராஜருக்கு சிலை அமைக்கப்பட்டது. பெரியார் காமராஜரை பச்சை தமிழன் என்றார். காமராஜரிடம் இருந்த பெருந்தன்மை அரசியல் பண்பாடு, அரசியல் நாகரீகத்தை என்றும் மறக்க முடியாது.

என் மகன் ஸ்டாலின் திருமண விழாவில் உடல்நிலை மோசமாக இருந்த வேளையிலும் சிரமத்தை பார்க்காமல் வந்து கலந்து கொண்டார். என் தாயார் அஞ்சுகம் அம்மையார் இறந்தபோது என் வீட்டுக்கு நான் செல்வதற்கு முன்பாகவே அன்றைய முதல்வராக இருந்த காமராஜர் வந்து காத்து நின்றார். தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்தபோது எவ்வளவோ விமர்சனம் செய்தும் அதை பெரிது படுத்தாமல் காமராஜர் தமிழர் பண்பாட்டு சின்னமாக விளங்கினார்.

தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி காமராஜர் பிறந்த தினம் கல்வி வளர்ச்சி தினமாக கொண்டாடப்படுகிறது. மத்திய மந்திரி ப.சிதம்பரம் மதுரையில் காமராஜர் பெயரில் கல்வி ஆராய்ச்சி பல்கலைக்கழகம் தொடங்க வேண்டும் என்று கூறினார். அவர் கோரிக்கையை ஏற்று கல்வி ஆராய்ச்சி பல்கலைக்கழகம் அமைக்கப்படும். அதற்கு வேண்டிய நிதியை நாங்களும் கொடுப்போம் மத்திய அரசிடமும் பெறுவோம்.

இவ்வாறு கருணாநிதி பேசினார்.

விழாவில் மத்திய மந்திரி ப.சிதம்பரம், காங்கிரஸ் மேலிட பார்வையாளர் வீரப்பமொய்லி, மத்திய மந்திரி இளங்கோவன், அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன், எம்.பி.க்கள் ஞானதேசிகன், கே.வி.தங்கபாலு, சுதர்சன நாச்சியப்பன், ஆரூண், எம்.எல்.ஏ.க்கள் சுதர்சனம், யசோதா, பீட்டர் அல்போன்ஸ், மாவட்ட தலைவர்கள் ராயபுரம் மனோ கோவிந்தசாமி, மங்கள்ராஜ், நிர்வாகிகள் கே.சிரஞ்சீவி, ஜோதி, தாமோதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முதல்-அமைச்சர் மற்றும் தலைவர்களுக்கு மேளதாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. எஸ்.ஜி.விநாயகமூர்த்தி வரவேற்றார். முடிவில் துணை மேயர் கராத்தே தியாகராஜன் நன்றி கூறினார்.

சத்தியமூர்த்தி பவனில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் காமராஜர் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இளைஞர் காங்கிரஸ் தலைவர் மïரா விஜயகுமார் தலைமையில் மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், சீருடைகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்ச்சியில் நிர்வாகிகள் பிஜுஜாக்கோ, காண்டீபன், கோபி, அமுல்பிரகாஷ், ஜிம்பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மாலை மலர் செய்தி

Friday, July 14, 2006

காமராஜ்

காமராஜர் ஆட்சியும் வளமிக்க தமிழகமும்

பெருந்தலைவர் காமராஜர் முதலமைச்சராக பதவி வகித்த காலங்களில் நாட்டு முன்னேற்றம், நாட்டு மக்களின் வாழ்க்கை முன்னேற்றம், கல்வி, தொழில் வளத்துக்கே முன்னுரிமையளித்தார்.

அவரது ஆட்சி காலத்தில் தமிழகம் வளமிக்க மாநிலமாக பொற்கால ஆட்சி நடந்ததற்கு சில நற்சான்றுகளாய் விளங்கும் சாதனைகள் வருமாறு:-

காமராஜரின் ஆட்சி காலத்தில்தான்...

கீழ் பவானித்திட்டம், மேட்டூர் கால்வாய்த்திட்டம், காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம், மணிமுத்தாறு, அமராவதி, வைகை, சாத்தனூர், கிருஷ்ணகிரி, ஆரணியாறு ஆகிய 9 பெரும் நீர் பாசன அணைத் திட்டங்கள்

அகண்ட காவிரியின் வலக்கரையில் கட்டளைக்கரை ரெகுலேட்டருக்கு சற்று மேலாக புதிய கட்டளை உயர் மட்ட கால்வாய் அமைத்தார்.

காவேரியின் இடைக்கரையில் ஸ்ரீரங்கத்தின் தொடக்கத்தில் மேல் அணைக்கட்டுக்கு மேல் புள்ளம்பாடி கால்வாய் வெட்டப்பட்டது.

தென்னார்க்காடு மாவட்டம் வடூரின் அருகே வரகத்தின் குறுக்கே அணை கட்டினார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நெய்யாறு திட்டம்

கோவையில் பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம்.

தமிழகத்தில் ஆயிரத்து 600 ஏரிகள் அபிவிருத்தி செய்யப்பட்டன.

நெய்வேலி பழுப்பு நிலக்கரி கழகம்.

உதகையில் உள்ள இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் தொழிற்சாலை.

கிண்டியில் உள்ள அறுவைச் சிகிச்சைக் கருவிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை.

பெரம்பூர் ரெயில் பெட்டி தொழிற்சாலை.

பாரத்ஹெவி எலக்ரிக்கல்ஸ்

சிமெண்ட் தொழிற்சாலைகள்.

மேட்டூர் காகித தொழிற்சாலை.

கிண்டியில் உள்ள தொழிற்பண்ணை

சென்னைக்கு அருகே ஸ்டாண்டர்டு மோட்டார் கம்பெனி.

சென்னைக்கு அருகே ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள் தொழிற்சாலை.

மேட்டுப்பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள ரயான் செயற்கைப்பட்டு தொழிற்சாலை.

அம்பத்தூரில் உள்ள டன்லப் ரப்பர் கம்பெனி.

தென் ஆற்காடு மாவட்டம் புகளூர், மதுரை பாண்டிராஜபுரம், தஞ்சை வடபாதி மங்கலம், திருச்சி பெட்டவாய்த்தலை, கோவை உடுமலைப்பேட்டை, வட ஆற்காடு ஆம்பூர், செங்கல்பட்டு படாளம் ஆகிய ஊர்களில் சர்க்கரை ஆலைகள் தோற்றுவிக்கப்பட்டன.

15 ஆயிரத்து 303 ஆரம்பப் பள்ளிகளை தமிழகத்தில் 26 ஆயிரத்து 700 ஆரம்ப பள்ளிகளாக உயர்த்தினார்.

18 லட்சம் சிறுவர்கள் படித்ததை 34 லட்சம் சிறுவர்கள் படிக்கும் நிலைக்கு தமிழகத்தை உயர்த்தி காட்டினார்.

471 உயர் நிலைப்பள்ளிகளாக இருந்ததை ஆயிரத்து 361 உயர் நிலைப்பள்ளிகளாக கொண்டு வந்தார்.

தமிழகத்தில் 28 கல்லூரிகள் என்று இருந்ததை 50 கல்லூரிகளாக உயர்த்தினார்.

6 பயிற்சி கல்லூரிகளை 17 பயிற்சி கல்லூரிகளாக மாற்றினார்.

தமிழகத்தில் 19 மாதிரி தொழில் பள்ளிகள், 6 செய்முறை தொழிற்பயிற்சி நிலையங்கள், 19 பொது வசதி பட்டறைகள் 5 சமூக நல நிலையங்கள்

இவை போக ஏராளமான சிறு, குறு தொழிற்சாலைகள் தமிழகத்தின் வீதிகளில் தொடங்கப்பட்டன. பெரியார் சொன்னதுபோல் மூவேந்தர் ஆட்சி காலத்திலும் இல்லாத பொற்கால ஆட்சி காமராஜர் ஆட்சி காலத்தில்தான் இருந்தது

காமராஜர் பிறந்தநாள் இன்று

பச்சைத் தமிழன் காமராஜர்


கர்மவீரர் காமராஜர்

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காங்கிரஸ் மைதானம், சத்திய மூர்த்தி பவன் இவையெல்லாம் பல கோடி ரூபாய் மதிப்புள்ளவை இவை காமராசர் தேடிய செல்வம். ஆனால் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்காக அவர் தேடியவை.


சென்னையில் வாடகை வீட்டில்தான் கடைசி வரை காமராசர் வசித்தார்.


முதல்-அமைச்சராக இருந்த போது, அவர் வீட்டில் அரசு சார்பில் ஒரு தொலைபேசி இருந்தது. எப்போது பேசினாலும் பேசிய நேரம், பேசிய ஊர் முதலியவற்றை ஒரு நோட்டில் குறித்து வைக்க வேண்டும. அப்போதெல்லாம் எஸ்.டி.டி. வசதிகள் கிடையாது.


டிரங்கால் பதிவு செய்துதான் பேச வேண்டும். டெலிபோன் பில் வந்தவுடன் அந்த நோட்டில் உள்ள விவரங்களைப் பார்த்து அரசு சம்பந்தப்பட்ட தொலைபேசி அழைப்புக்கான கட்டணத்தை மட்டும் அரசு கணக்கில் செலுத்தவும், மீதியை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கணக்கில் செலுத்த வேண்டும் என்பது காமராசரின் உத்தரவு.


முதல்-அமைச்சராக இருந்த போது கட்சி நிகழ்ச்சிகளுக்காக செல்ல நேர்ந்தால் அரசுக்கு சொந்தமான காரில் போவதில்லை.முதல்-அமைச்சருக்கான சம்பளத்தை அரசு காசோலையாக (பேங்க் செக்) வழங்கும். அதைப் பணமாக மாற்றுவதற் காகவே காமராசரின் பெயரில் ஒரு வங்கிக் கணக்கு இருந்தது.


முதல்-அமைச்சருக்கான சம்பளம் முழுவதையும் காமராசர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியிடம் கொடுத்து விடுவார். அவரது அம்மாவுக்கு ரூ. 150ஐ காங்கிரஸ் கமிட்டி அனுப்பி வைக்கும் கட்சிக்காக டில்லிக்கு விமான பயணம் செய்தால் விமான டிக்கெட்டு களை தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டிதான் வாங்கும்.


பழைய தியாகிகள் யாராவது பண உதவி கேட்டு வந்தால் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு ஒரு கடிதம் கொடுப்பார். அங்கு பணம் கொடுத்து விடுவார்கள்.


மாதத்தில் பாதி நாட்கள்தான் சென்னையில் இருப்பார். மீதி நாட்களில் தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருப்பார்.


அதற்கான பயணப்படி உண்டு. ஆனால் பெருந்தலைவர் முதல்-அமைச்சராக இருந்த காலத்தில் பயணப்படி கோரியதும் இல்லை, பெற்றதும் இல்லை.வெளியூர்களில் பயணம் செய்யும் போது பயணிகள் விடுதியில் (டிராவலர்ஸ் பங்களா) தான் பெரும்பாலும் தங்குவார். அந்தந்த ஊர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பயணிகள் விடுதிக்கான வாடகையைக் கொடுக்க வேண்டும்.


காமராசரின் சட்டையில் ஒரு பெரிய பை இருக்கும். ஆனால் அதில் பணமே இராது. சில சமயங்களில் சில்லறை நாணயங்களை வேஷ்டி மடியில் வைத்திருப்பார். யாராவது யாசகம் கேட்டால் போடுவதற்காக அந்த காசுகள் உபயோகப்படும்.


காமராசரின் சொந்த காருக்கு டிரைவராக ஒரு போலீஸ்காரர் தான் இருந்தார். அந்த டிரைவருக்கான சம்பளத்தையும் காமராசரே கொடுத்து வந்தார். (எனக்குதான் டிரைவர் அலவன்ஸ்'' என்று சம்பளத்தோடு கொடுக்கிறாங்களே, அந்த பணத்தையும், என் பணம் கொஞ்சத்தையும் டிரைவருக்கு கொடுக்கிறேன் என்றார், பெருந்தலைவர்)


காமராசர் இறந்தபோது அவர் வீட்டில் (சென்னையில்) இருந்த மொத்த பணம் வெறும் 67 ரூபாய் மட்டுமே. (இது அப் போதைய அமைச்சர் ராசாராம் சொன்ன தகவல் என்று `சாவி' எழுதியுள்ளார்) காமராசர் பல வங்கிகளில் பணம் போட்டு வைத்திருக்கிறார் என்று பலர் மேடைகளில் பேசியதுண்டு, எழுதிய துண்டு. அது பொய் என்று நிரூபித்தது இந்த 67 ரூபாய்.


ராம் மனோகர் லோகியா என்று வட இந்தியாவில் ஒரு தலைவர் இருந்தார். அவர் ஒரு சிறந்த அரசியல்வாதியாகப் போற்றப்பட்டவர். வெளி நாட்டில் படித்துப் பட்டம் பெற்றவர். காங்கிரஸ் கட்சியில் அவர் இருந்தார்.


காங்கிரஸ் கட்சியில் வெளிநாட்டு இலாக்கா என்று ஒரு பிரிவு இருந்தது. அந்த வெளிநாட்டு இலாக்காவுக்கு லோகியாதான் தலைவ ராக இருந்தார்.


அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் அப்போதையத்தலைவராக இருந்த ஜவஹர்லால் நேருவுடன் ஏற்பட்ட கருத்து வேற்றுமை காரணமாக காங்கிரஸ் கட்சியிலிருந்தே வெளியேறிய லோகியா சோஷலிஸ்ட் கட்சியைத் துவக்கினார்.


லோகியாவுக்குக் காங்கிரஸ் கட்சியே பிடிக்கவில்லை. நேரு என்றாலே வெறுப்பு. நேருவை எதிர்த்துத் தேர்தலில் போட்டியிடுவதும் உண்டு. நேருவின் கொள்கைகளை மிகவும் கடுமையாகச் சாடுவது லோகியாவின் வாடிக்கையாகி விட்டது.


நேரு பிரதமராக இருந்தபோது லோகியா எதிர்க்கட்சித் தலைவர்களுள் ஒருவராக இருந்தார். நேரு பிரதமராக இருந்த காலத்திலேயே நேருவுக்குப் பின் யார் என்று ஒரு பிரபலமான கேள்வி அடிக்கடி எழுவது உண்டு.


ஒரு முறை ஒரு பத்திரிகை நிருபர் "நேருவுக்குப் பின் யார் - உங்கள் கருத்து என்ன?" என்று லோகியாவைச் சீண்டினார். காமராஜ் இருக்கும் போது என்னிடம் ஏன் இந்தக் கேள்வியைக் கேட்கிறாய் என்று லோகியா சொன்னார்.


நேரு இறப்பதற்குப் பல ஆண்டு களுக்கு முன்பே லோகியா இவ்வாறு சொன்னார். அகில இந்திய காங்கிரசில் லோகியா இருந்த போதே தமிழ்நாட்டு காமராசரை லோகியா உன்னிப் பாகக் கவனித்து வந்துள்ளார். நேருவுக்குப் பின் காமராசர் தான் வருவார் என்பதை அப்போதே கணித்து வைத்து விட்டார்.


நேருவுக்குப் பின் காமராசர் டில்லி அரசியலில் கிங் மேக்கர் ஆனார். ஆனால் அதைக் காண்பதற்கு லோகியா உயிருடன் இல்லை.


நேருவுக்குப் பின் யார்? சுயநலமின்றி, நேர்மையுடன் நெறி தவறாமல் நாட்டுக்காக பணியாற்றிய தலைவர்கள் மறைந்து விட்டாலும், ஈடு இணையற்ற தலைவர்களாக மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.


இப்படிப்பட்டவர்களில் ``பெருந்தலைவர்'' என்று மக்கள் தங்கள் இதயங்களில் வைத்து துதிக்கும் தலைவர்தான் காமராஜர்.


ஏழை குடும்பத்தில் பிறந்தாலும் அயராத உழைப்பால் தூய்மையான தொண்டால் உயர முடியும் என்பதை உலகத்துக்கு நிரூபித்து காட்டியவர். ``நாட்டு நலனே எனது நலன்'' என்று கருதி காந்திய வழியில் நின்று அரும்பாடுபட்ட காமராஜர் தான் கொண்ட கொள்கைகளை பதவி சுகத்துக்கு பறிகொடுக்காத உத்தமர்

நாளை பெருந்தலைவரி்ன் பிறந்த நாள்
கிங்மேக்கர்





இந்தியாவின் தவப்புதல்வன்