Saturday, August 12, 2006

ஒரு நேதாஜி எத்தனை தடவை சாவார்?




நேதாஜியின் மர்ம மறைவைப் பற்றி விசாரித்தறிவதற்காக மத்திய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டடுள்ள விசாரணைக் கமிட்டியால் அழைக்கபட்டவன் என்ற முறையில் நான் ஏப்ரல் 1-ம் தேதி இங்கு (டில்லி) வந்து விட்டேன்.


நான் டில்லிக்கு வரவேண்டுமென்று வேண்டி திரு. ஷாநவாஸ் கான் எனக்கொரு கடிதம் எழுதியிருந்தார் - அதே வேண்டுகோள் கடிதம் மேலும் சிலருக்கும் அனுப்பப்பட்டிருக்கிறது. ஆனால் எனக்கெழுதிய கடித்திற்கும் . பிறருக்கு எழுதிய கடிதத்திற்கும் கருத்து வேறுபட்டிருக்கிறது.


அதாவது: எனக்கெழுதிய கடித்தில்,"நோதாஜி எப்படி மறைந்தார்? (டிஸ் அப்பீரன்ஸ்) என்பதைப் பற்றி விளக்க." என்று குறிப்பிட்டிருந்தது. ஆனால், என்மாதிரி விளக்கமளிக்க அழைக்கப்பட்ட பிறருக்கு எழுதிய கடிதத்தில் " நேதாஜி எப்படிச் செத்தார் - செத்ததற்கான காரணங்கள் ( சர்க்கம் ஸ்டென்சஸ் ஆப் நேதாஜீஸ் டெத்) எவை என்பதை விளக்க" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.


விசாரணைக் கமிட்டியின் ஆரம்பப் போக்கே கூறுபிரிந்து காண்கிறது. இதன்மூலம் அரசாங்கம் ஏற்கனவே நேதாஜி பற்றி ஒரு முடிவுக்கு வந்து விட்டதாகவும் தோன்றுகிறது. அதேசமயம் நேதாஜி பற்றிய விஷயத்தைத் தவறான முறையில் பிரச்சாரிப்பதாகவும் கருதத் தோன்றுகிறது. இது என்ன – ஏன்? என்பது சரிவரப் புரியவில்லை.


நான் ஏப்ரல் 1-ம் தேதி காலை 9 மணி சுமாருக்கு டில்லி வந்து சேர்ந்தவுடன், ஷாநவாஸ் கான் என்னை டெலிபோனில் அழைத்தார் - பேசினேன். அன்று மாலையே சந்திக்க வேண்டுமென்று கோரினார் - சரி என்றேன். அதன்படி மாலை 6 மணிக்கு அவரைச் சந்தித்தேன்.


விசாரணக் கமிட்டியைச் சேரந்த மூவரில் ஒருவரான. அந்தமான் தீவுகளின் நிர்வாகி திரு. மொய்த்ரா இதுவரை டில்லி வந்து சேரவில்லை - அவர் எந்தச் சமயத்திலும் விசாரணைக் கமிட்டியோடு வந்து சேர்ந்து கொள்ளலாமென எதிர்பார்க்கிறோம் - என்று அவர் எனக்கு அறிவித்தார். இன்று தேதி ஏப்ரல் 3- அதுவரை அந்தத் திரு. மொய்த்ரா வரவில்லை - எப்பொழுது வருவார் என்பததற்கான அறிகுறியும் தெரியவில்லை. சாட்சியமளிக்க வந்த வேறு சிலரும் கடந்த மூன்று நாட்களாகக் காத்திருக்கின்றனர்.

விசாரணைக் கமிட்டிக்குள்ள பொறுப்பின் கனத்துக்கு இது ஒரு உதாரணம்.


விசாரணைக் கமிட்டி ஜப்பானுக்குத்தான் செல்லுமென்று சொல்லப்படுகிறது. கமிட்டி தன் நோக்கம் போல் எந்த நாட்டிற்கும் செல்ல உரிமை பெற்றிருக்கிறதா? என்பதும் தெரியவில்லை.


நேதாஜி சீனாவில் இருப்பதாகத் தெரிகிறது. பீகிங்கில் 1952ல் நடந்த ஒரு மாநாட்டில் மங்கோலியப் பிரதிநிதிகளில் ஒருவராக நேதாஜி சென்றிருந்ததாகவும் அறிகிறோம். " அந்த மங்கோலியப் பிரதிநிதிகளுடன் எடுக்கப்பட்ட புகைப் படத்தில் தெரியும் ஒருவர் நேதாஜி மாதிரியே இருக்ககிறார்" என்று கனம் நேரு அவர்களே கூறியுள்ளார்கள். எனவே விசாரணைக் கமிட்டி தன் நோக்கம் போல் எந்த நாட்டிற்கும் செல்ல அனுமதிக்கப்பட வேண்டியது அதி அவசியம்! பிறரின் கட்டுப்பாட்டிற்கோ, தனிப்பட்டோரின் நோக்கத்திற்கோ மடங்கி, கமிட்டி வேலை செய்யலாகாது.


திரு. ஷாநவாஜ்கான், கமிட்டித் தலைவராக இருக்கிறார். இதற்கு இவருடைய தகுதியைப் பற்றிநான் எதையும் கூறவில்லை. ஆனால் அவர் ஒரு ராணுவத் தளபதி, ராணுவரீதியில் அவரது தலைமையில் பல சிறந்த வெற்றிகளை எதிர்பார்க்கலாம்..


ஆனால் நேதாஜியின் மர்ம மறைவுப் பிரச்சனை ராணுவ விவகாரமல்ல – நீதி சம்பந்தப்பட்ட விவகாரம். எனவே கமிட்டித் தலைவராக ஒரு சிறந்த ராணுவ நிபுணர் இயங்குவதைவிட, நீதி நிர்வாகத்தில் தேர்ந்த ஒரு நீதிபதி இயங்குவதில் அதிக பலனை எதிர்பார்க்கலாம். அது தான் நெறி! கமிட்டித் தலைமைக்குப் பொருத்தமானவர் அகில உலகப் புகழ்பெற்ற நீதிபதி பால் அவர்கள்தான் என்பது எனது கருத்து - முடிவு. இதில் நியாயபாவமுள்ள எவரும் மாறுபடமாட்டார்கள் என்றே கருதுகிறேன். விசாரணைக் கமிட்டித் தலைமையை ஏற்க நீதிபதி பால் அவர்களை அழைக்க வேண்டும்.


இது இவ்வாறிருக்க, யுத்தக் குற்றவாளிகள் பட்டியலில் நேதாஜியின் பெயர் இன்னும் இருக்கிறதா - இல்லையா? இல்லாது போனால்எப்பொழுது - எப்படி நீக்கப்பட்டது? என்பதை அரசாங்கம் இந்தக் கட்டத்தில் அதிகார பூர்வமாய் மக்கள் சன்னதியில் வெளியிட்டுவிட வேண்டு மென்பது எனது தாழ்மையான வேண்டுகோள்.


1941 ஜனவரி 10ல் நேதாஜி இந்தியாவை விட்டு வெளியேறினார் - ஆனால் இது ஜனவரி 16ல் தான் அரசாங்கத்திற்குத் தெரியும் . அந்தத் தேதிக்குப் பிறகுதான் அரசாங்கம் தேடத் தொடங்கிற்று.


நேதாஜி செத்துவிட்டதாகச் சொல்லப்படுவது இப்பொழுது மட்டுமல்ல – ஏற்கனவே நடந்திருக்கிறது.


1942 மார்ச்சில் சர்.ஸ்டாப் போர்ட்டு கிரிப்ஸ் தனது திட்டத்தோடு இந்தியாவுக்கு வந்திருந்தபோது. 1941 ஜனவரி 10ல் நாடு கடந்த நேதாஜி இறந்துவிட்டார் என்ற செய்தி வந்தது.


இச்செய்தியை முதன்முதலில் கொடுத்தது லண்டன் ராய்ட்டர் செய்தி நிலையம்.


டோக்கியோவில் நடைபெறும் சுதந்திர இந்தியக் காங்கிரசுக்கு விமானத்தில் செல்லும் வழியல் ஜப்பானிய கடற்கரைக்கு அப்பால், விமானம் விபத்தாகி சுபாஷ்போஸ் உயிரிழந்தார் என்பது ராய்ட்டர் செய்தி.


இச்செய்தி பிரான்சிலிருந்து லண்டனுக்குக் கிடைத்தது. பிரான்ஸ் அச்செய்தியை ரோமாபுரியிலிருந்து பெற்றதாம். ரோமபுரிக்கு அச்செய்தி டோக்கியோவிலிருந்து, பெர்லின் வழியாக வந்ததாம்! எனினும் அச்செய்தி நிரூபிக்கபட்டவில்லை . இந்திய சமுதாயத்தின் பாக்கியவசத்தால் , 1942 மார்ச்சில் ராய்ட்டர் செய்தியின் மூலம் செத்த சுபாஷ்பாபு பிறகு உயிரோடு தோன்றிவிட்டார்.

இரண்டாவது தடவையாக நேதாஜி செத்துவிட்டார் என்றால் செய்தி 1945 ஆகஸ்ட் 24ல் இந்தியப் பத்திரிகைளில் வெளியாயிற்று. அச்செய்தி ஆகஸ்ட் 23 ல் லண்டனிலிருந்து இந்தியாவுக்குக் கொடுக்கபட்டுள்ளது. ஆனால், ஏற்கனவே திட்டமிட்டுச் செய்யும் விமான விபத்து நடந்தது 1945 ஆகஸ்ட் 18ல்.


உலக முக்யத்துவம் வாய்ந்த இச்செய்தி ஐந்து நாட்கள் தாமதித்து பத்திரிகைகளுக்கு வந்தது. பத்திரிகையுலகிலேயே இது வரை நடந்திராத புதுமையாகும்.


"ஜப்பான் சர்க்காரோடு பேசுவதற்காக ஆசாத் ஹிந்த் அரசாங்கத் தலைவர் நேதாஜி போஸ், 1945 ஆகேஸ்ட் 16ல் சிங்கப்பூரை விட்டு டோக்கியோவுக்குச் செல்லும் வழியில் அவர் பிரயாணித்த விமானம் டைஹோக்கு விமான நிலையத்தில் 1945 ஆகஸ்ட் 18 பிற்பகல் 2 மணிக்கு விபத்திற்கிலக்காகியதால் நேதாஜி போஸ் ஆபத்தான காயங்களுடன் ஜப்பானுக்கு எடுத்துச் செல்லப்பட்டு சிகிச்சையளித்தோம் - குணமாகவில்லை - அன்று நள்ளிரவில் காலமாகிவிட்டார்" என்பது ஜப்பான் அரசாங்கம் கொடுத்த செய்தி.


அவருடன் அதே விமானத்தில் சென்ற கர்னல் ஹபிபுர் ரஹ்மானும், இதர ஐந்து ஜப்பானியத் தளபதிகளும் காயம் பட்டுப் பிறகு பிழைத்துக்க விட்டதாகச் செய்தி! ஆயினும், எல்லோருமே செத்துவிட்டதாகப் பிறகு ஜப்பான்ட தரப்பில் கூறப்படுகிறது.


நேதாஜி இறந்துவிட்டதாக வெளியான செய்திகளில் இது இரண்டாவதாகும்.


ஆனால், இரண்டாவது தடவையும் உயிரோடு மிஞ்சிவிட்டார் - செய்திகளையெல்லாம் கடந்து!


நேதாஜியுடன் சென்று விமான விபத்தில் காயம் பட்ட ஜப்பானியத் தளபதிதான் பின்னர் பார்மோசாவில் அமெரிக்கரிடம் சரணாகதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இந்தக் கட்டம் தான் நேச தேசத்தினருக்குச் சந்தேகத்தை எழுப்பிவிட்டது.


விமான விபத்து என்று ஒன்று உண்மையிலேயே நடந்திருந்தால், இந்த ஜப்பானிய தளபதியுமல்லவா செத்திருக்க வேண்டும்? என்ற சந்தேகக் கேள்வி நேச தேசத் தளபதிகளிடம் எழுந்தது.


நேதாஜி இறந்துவிட்டதாக அறிவிக்கபட்டு ஒரு மாதம் சென்றபின் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக் கூட்டம் பம்பாயில் நடைபெற்றது. கூட்ட ஆரம்பத்தில், 1942 ஆகஸ்ட் 8 க்குப் பிறகு இறந்துபோன முக்கியத் தலைவர்களுக்கு அனுதாபம் தெரிவிப்பதற்கான இறந்தவர்களின் பெயர் பட்டியலை கிருபளானி படித்தார்.


அதில் சுபாஷ்பாபுவின் பெயர் படிக்கபட்படவில்லை." இது ஏன்?" என்று ஒரு உறுப்பினர் கேட்டார். அதற்கு அன்றையக் காங்கிரஸ் ராஷ்டிரபதியாக இருந்த மெளலானா அபுல்கலாம் ஆசாத்."நேதாஜி சுபாஷ் இறந்துவிட்டதாகக் கிடைத்த செய்திகளைத் திட்டவட்டமாக நம்புவதற்கில்லை - அச்செய்தியைக் கொடுத்த வட்டாரமே அதை உறுதிப்படுத்தும் வகையில் எதையும் வெளியிடவுமில்லை - எனவே அவர் பெயரை இறந்தவர்களின் பட்டியலில் சேர்க்கவில்லை" என்று பதில் கொடுத்தார்! இந்தப் பதிலுக்குக் கூட்டத்தினர் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.


இதுதவிர 1945 செப்டம்பர் 2ல் சுபாஷ் பாபுவின் தொடர்பு, காந்தியடிகளுடன் இருக்கிறது என்ற ஐயப்பாட்டின் மீது, அன்று மகாத்மா புனாவில் தங்கியிருந்த இயற்கை வைத்திய மாளிகையை 24 சி..டி.கள் சுற்றி வளைத்து நின்றார்கள் - நேதாஜியைக் கைது செய்ய! ஆனால் கொஞ்ச நேரத்தில் அவர்கள் ஏமார்ந்து விட்டனர். ஏனெனில் சுபாஷ் போஸ் என்று நினைத்துக் கைது செய்ய மகாத்மாவின் ஜாகைக்கு வந்த சி..டி.கள் அங்கிருந்த நேதாஜியின் தம்பியான சலீல் போஸ் எனத் தெரிந்து கொண்டதால் தொங்கிய முகத்துடன் திரும்பிவிட்டனர்.


அதிலிருந்து நேதாஜியின் மரணத்தை நம்பாத பிரிட்டானியர் இன்றுவரை அவரைத் தேடிக் கொண்டுதான் இருக்கின்றனர்


பின்னர் பத்து நாள் கழித்து மற்றோரு செய்தி வந்தது ராய்ட்டர் மூலம்.


"நேதாஜி இறந்து போனார் என்று ஜப்பான் வெளியிட்ட கொஞ் நாட்களுக்குப்பிறகு. செய்கோனில் அவர் இருந்ததாக நிச்சயமாகத் தெரிகிறது" என்று அமெரிக்க நிருபர் அறிவித்தார். அதை ஆங்கிலோ - அமெரிக்க வட்டாரம் அலட்சியப்படுத்தவில்லை - நம்பிற்று.


இதையடுத்து மற்றொரு செய்தி இந்திய அசோசியேட்டட் பிரஸ் மூலம் வெளியாயிற்று.


சயாம் ராணுவ உதவித் தலைமைத் தளபதி லெ. ஜெனரத் அக்டி சேனாநரொங் என்பவர்," ஜப்பானியரின் செய்தியை வைத்து நேதாஜி இறந்துவிட்டதாக என்னால் நம்ப முடியாது இதற்கு முன் இதே மாதிரி பல செய்திகள் நேதாஜி மரணம் பற்றி வெளியாகி விட்டன. ஆனால் ஒரு செய்தியாவது அவரை இது வரை நிஜமாகக் கொல்லவில்லை" என்று நிருபர்கள் கூட்டத்தில் கூறுகையில் குறிப்பிட்டதுதான் அச்செய்தி.


1945 செப்டம்பர் 18-ல் மற்றொருசெய்தியை இலங்கையிலிருந்து யுனைடெட் பிரஸ் வெளியிட்டது.


அதாவது: "சிங்கப்பூரில் பிரபல வழக்கறிஞராகவும் ஜப்பானிய ஆட்சியின் போது நீதித்துறையை நிர்மாணித்து உயர்நீதிமன்ற நீதிபதியாகவும் இருந்த திரு. எம்.வி. பிள்ளை,நேதாஜி இறந்ததை எதிர்க்கிறார். "ஏனெனில் அவருடன் அதே விமானத்தில் பிரயாணம் செய்து விபத்தில் சிக்கி. மடிந்து விட்டதாச் செய்தி கொடுக்கப்பட்ட ஜப்பான் தளபதிகளில் ஒருவரான கிமுரா என்பவர்தான் பிறகு சிங்கப்பூரில் நேச தேசப்படையினரிடம் சரணாகதி ஒப்பந்தத்தில் கையெழுதிட்டவர். இவர் ஒருமாத்திற்குள் செத்து எப்படிப் பிழைத்து வந்தாரோ அதேமாதிரிதான் நேதாஜியின் மரணச் செய்தியுமிருக்கும்" என்று அவர் கூறினார்.


பின்னர்1946 மார்ச்சு 24ம் தேதியிட்டு ஏ.பி.. செய்தி நிலையம் சென்னையிலிருந்த வெளியிடப்பட்ட ஒரு செய்தியை லாகூரில்உள்ள 'ட்ரிபியூன்' பத்திரிகை மார்ச 26ல் பிரசுரித்திருந்தது.


அதாவது:"சிங்கப்பூர் வீழ்ச்சியின்போதுநகரசபை இஞ்ஜினியாராக இருந்த திரு. நாயர்என்பவர், நேதாஜியின் மரணச்செய்தியில் ஒரு எழுத்தைக்கூட ஏற்கவில்லை. ஏனெனில், டைஹோக்குவில் விபத்தாகி நொறுங்கிவிட்டதாகச் செய்தி கொடுக்கப்பட்ட நேதாஜி சென்ற விமானம். மறுநாள் ஹாங்காங்கில் காணப்பட்டது. அதில் எவ்விதச் சேதமோ பழுதோ கிடையாது என்று நாயர் கூறுகிறார்."


1946மார்ச் 12ல் ஐ.என்.. வீரர்களான ஷாநவாஸ் கானும், சைகாலும் காந்தியடிகளோடு பேசிக் கொண்டிருக்கையில், "நீங்கள் எதிரெதிரான எத்தகைய செய்திகளைக் கொடுத்தாலும் நேதாஜி போஸ் சாகவே இல்லை என்பதுதான் எனது தீர்மானம்" என்று காந்தியடிகள் கூறியிருக்கிறார்கள்.


இவையெல்லாம் சிலருக்குத் தெரிந்திருக்கலாம் - பலருக்கு தெரியாதிருக்கலாம் . ஆனால், சுபாஷ் பாபு இறந்து விட்டதாக முளைத்த செய்தி அதன் தொடுவாயிலே எவரின் நம்பிக்கையையும் பெறவில்லை என்றாலும், அச்செய்தி பல கிளைகளாக வளர்ந்து எப்படியெல்லாம் ஆகிவிட்டிருக்கிறது என்பதைச் சரியான கட்டத்தில் நினைவுறுத்த வேண்டுமென்பதற்காகவே தலைநகரில் அவைகளை விவரிக்கிறேன. இவை நிற்கட்டும். இன்றைய நடப்புக்கு வருவோம்.


நேதாஜியை ஜப்பானியர்கள் தான் மஞ்சூரியாவுக்கு அழைத்துச் சென்றனர்.


ஏனெனில், ஜப்பான் அச்சு நாடுகளின் கூட்டில் பிணைந்திருந்தாலும் (அச்சு நாடுகளின் தலைமையான ஜெர்மனிக்கு எதிரி நாடான), ரஷ்யாவோடு நடுநிலைமை ஒப்பந்தம் செய்த கொண்டிருந்தது (இதற்கு ஏற்பாடு செய்தவர் நேதாஜிதான்). மேலும் காலந்தாழ்த்தினால் ஆங்கிலோ - அமெரிக்கப் படைகள் மஞ்சூரியாவுக்குள் புகுந்துவிடும். அதைத் தடுத்துவிட வேண்டு மென்பதற்காக ஜப்பானும், ரஷ்யாவும் இரகசியமாகப் பேசிக் கொண்டு, தக்க முன்னேற்பாட்டுடன் சரணடைவதற்கு ஒரு வாரம் முன், ரஷ்யா, ஐப்பான் மீது போர்ப் பிரகடனம் விடுத்தது. இதற்கு முன்பே ஜப்பானின் தலைசிறந்த ராணுவ நிபுணர்களும், தளபதிகளும், கடற்படை - விமானப்படைகளில் மிக முக்கிய நிபுணர்களும், மஞ்சூரியாவுக்கு மாற்றப் பட்டு விட்டனர். ஆகவேதான் நேதாஜி மஞ்சூரியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பிறகு 1945 செப்டம்பரில் யுத்தம் முடிந்தது.


இரண்டாவது உலகப்போர், திட்டமிட்டவாறு கிழக்காசியாவில் முடிந்த பிறகு. ஆசிய விடுதலைக்கென்று ஜப்பான் - சீன வீரர்களைக் கொண்ட ஒரு ராணுவத்தை மோசிடாங் தலைமையில் நேதாஜி நிர்மாணித்தார். அதில் பர்மா, இந்தோ - சீனா, இந்தோனேஷியா, மலேசியா, பிலிப்பைன், தாய்லந்து நாடுகளைச் சேர்ந்தவர்கள் இணைந்தார்கள். அந்த ராணுவத்திற்கு ரஷிய அரசாங்கம் உதவி.


ஆசிய விடுதலை ராணுவம், 1946 ஜனவரியில் - சீனாவில் போரை ஆரம்பித்தது. அந்தப் போருக்கு 'கம்யூனிஸ்டுகள் புரட்சி' என்று நேசதேசத்தினர் பெயர் கொடுத்தனர், ஆனால் அவர்கள் அலட்சியமாகக் கருதிய கம்யூனிஸ்டுகள் புரட்சிதான் சியாங்கே ஷேக்கை சீனாவை விட்டே வெளியேற்றிற்று, சீனர்கள், ஜப்பானியர்கள், இந்தியர்கள், இன்னும் தென் கிழக்காசிய நாட்டினர் அனைவரும் மனப்பூர்வமாய் ஒத்துழைப் பதைத் தெரிந்த, சியாங்கே ஷேக்கின் ராணுவத்தினர், தமது தலைவர் சியாங் அமெரிக்காவின் விளையாட்டுப் பிள்ளை என்பதையும் நன்கு புரிந்து கொண்டனர். உடனே ஆயிரக் கணக்கில், எல்லா நாடுகளும் சேர்ந்த ஆசிய விடுதலை ராணுவத்திடம் சரணடைந்தனர்.


இந்தக் கட்டம் அதோடு ஓய்ந்து விடவில்லை. தாம் இனி சீனாவில் கால் கொண்டிருக்க இயலாது என்ற ஒரு பீதியை அமெரிக்க வட்டாரத்தில் 47ஜுன், ஜுலை வாக்கில் எழுப்பிவிட்டது.


இந்தச் சந்தியில்தான் மெளன்ட்பாட்டனின் ராஜதந்திரத் திட்டம் இந்தியாவுக்குச் சுதந்திரம் தருவதென்ற அபிமானமாக உருவாயிற்று!


சீனாவில் ஏற்பட்ட சுதந்திர வேட்கை வெற்றியாகக் கனிந்து. ஆதன் மூலம் ஆசியா வெங்கும் வீசிய ஆவேச அனலை ஆற வைக்க வந்த திட்டம்தான் மெளன்ட்பேட்டன் சுதந்திரமேயன்றி உண்மையில் இந்தியாவைச் சுதந்திரமாக்கும் நன்னோக்கமல்ல.


எப்படியோ இந்தியாவுக்கு சுதந்திரம் என்ற ஒன்று அன்று ஏற்பாடாகி இராவிட்டால், சீனர்கள் எல்லை கடந்து இந்தியப் பிவேசம் செய்து, வேற்றாட்சியை வெளியேற்றியே இருப்பார்கள் - அதற்கு நேதாஜியும் திட்டமிட்டிருந்தார்.


மெளன்ட்பாட்டனின் தன்னக்கட்டு சுதந்திரம், அந்தச் சமயம் வாய்த்துவிட்டால், ஆசிய விடுதலை ராணுவம் காலத்தின் தேவைக்காக, நடவடிக்கையைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறது.


மூன்றாவது உலக யுத்தம் தவிர்க்க முடியாதது என்ற நிலை அன்றே ஏற்பட்டு விட்டதால், ஆங்கிலோ - அமெரிக்கருக்கு இந்தியாவில் தளம் தேவைப்பட்டு விட்டது. இதற்காகத்தான் முன்னேற்பாடாக இந்தியாவை உடைத்து. பாகிஸ்தான் என்று ஒரு நாட்டையும் உண்டாக்கினார்கள்.


எஞ்சிய இந்தியாவை நடத்துவதற்கிடையில் எதிர்ப்படும் சங்கடங்களைச் சமாளிக்க காந்தீயர்கள். காமன்வெல்த் உறவு என்பதன் பெயரால் பிரிட்டனோடு பிணைந்தார்கள்.


இப்பிணைப்பின் பலன் சீட்டோபாக்தாத் ஒப்பந்தங்களின் மூலம் நன்கு வெளிப்பட்டு விட்டது. இந்தியாவுக்கு வேண்டாத அந்த ஒப்பந்தங்களில், இந்தியாவுக்கு வேண்டியபிரிடன்அங்கம் பெற்றிருக்கிறது.


சீட்டோ, பாக்தாத் ஒப்பந்தங்களைக் கண்டிக்கிற இந்தியா, அவ்வொப்பந்தங்களுக்கு உடையவர்களான, ஈரான் மன்னர், அமெரிக்கா, பிரிட்டன் வெளிநாட்டு மந்திரிகளுக்கு மனக்கனிவோடு வரவேற்பளித்தது.


அறைச் சங்கதிகளெல்லாம் அம்பலத்துக்கு வந்துவிட்ட சூழ்நிலையில், நமது நேரு அவர்கள் ராணுவ சாதனங்களை பிரிட்டனிடமிருந்து பலகோடி ரூபாய்களுக்கு வாங்க ஒப்பந்தம் செய்து கையெழுத்திட்டிருக்கிறார்.


இதன் மூலம் இந்தியா எந்த முகாமில் சேரப்போகிறது என்பது தெளிவாகிறது.


இந்த நடப்போட்டங்கள் எவ்வாறிருந்தாலும், சர்வதேச ரீதியான நடவடிக்கைகளுக்குரியவாறு, தனது ஜனநாயகத்திட்டத்தை நிறைவேற்ற கண்ணிமைக்காமல் காத்திருக்கிறது ஆசிய சுதந்திரச் சேனை என்பதை நான் இந்த இடத்தில் சொல்லாமற் தீரவில்லை!.


நேதாஜி பற்றிய உண்மைகளைத் தெரிந்து கொள்ள நமது பிரதமர் நேருவுக்கு நிஜமாகவே அக்கறையும், அபிமாமமும் இருக்குமானால், நான் அவரை நேரில் சந்தித்து வேண்டிய விவரங்களைக் கொடுக்கத் தயாராகவே இருக்கிறேன்.



சொல்ல வேண்டியவற்றைச் சொல்லிவிட்டேன்


இரங்கூன் 'ரசிகரஞ்சனி' ஆசிரியர் திருச்சியில் ஓய்விலிருக்கிற பசும்பொன் தேவரவர்களை நவ. 27ல் பேட்டி கண்டு கேட்ட கேள்விகளுக்கு தேவரவர்கள் அளித்த பதில்கள் இவை:-

கனம், தேவரவர்கள் திருச்சி நகரைச் சேர்ந்த உறையூர் என்னும் வட்டாரத்தில், மேற்கு வண்டிக்காரத் தெருவிலுள்ள தியாகராஜத் தேவர் இல்லத்தில் , உடல் நிலை காரணமாக தற்கால்க ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறார். அங்கு சென்ற என்னை அவர் அன்புடன் வரவேற்று, அமரச் செய்து, என்னுடைய சுற்றுப்பிரயாணம் பற்றியும், பர்மாவில் வசிப்பவர்கள் பற்றியும் ஆவலோடு விசாரித்தார்.





கே. ஜீவபாரதி தொகுத்த

பசும்பொன் தேவரின் கட்டுரைகள்

என்ற புத்தகத்திலிருந்து