Saturday, July 15, 2006

காமராஜர் பெயரில் கல்வி ஆராய்ச்சி பல்கலை கழகம்: கருணாநிதி அறிவிப்பு

சென்னை, ஜுலை. 15-

பெருந்தலைவர் காமராஜரின் 104-வது பிறந்த தினவிழா சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நடந்தது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் எம்.கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார்.

முதல்-அமைச்சர் கருணாநிதி இதில் கலந்து கொண்டு பேசினார். அப்போது கூறியதாவது:-

இந்த விழாவில் நான் கலந்து கொள்வது பெருமை என்று கூறினார்கள். அதைவிட காமராஜர் பிறந்தநாள் விழாவுக்கு என்னை அழைத்ததை பெருமையாக கருதுகிறேன்.

அரசியலில் ஆயிரம் மாறுபாடுகள் இருந்தாலும், காமராஜர் அனைத்து கட்சியினருக்கும் அரசியலில் வழிகாட்டிய ஆசானாக இருந்தார். எத்தனை கருத்து வேறுபாடு, அரசியல் மாறுபாடு இருந்தாலும், அரசியல் காரணமாக விமர்சனம் செய்யும் சூழ்நிலை வந்தாலும் எனக்கும், தி.மு.க.வினருக்கும் காமராஜர் மீது தனி மரியாதை உண்டு.

எதிர்க்கட்சியாக இருந்தபோதும், சென்னை மாநகராட்சி தி.மு.க.விடம் இருந்த காலத்தில் அண்ணாவின் உத்தரவுப்படி காமராஜருக்கு சிலை அமைக்கப்பட்டது. பெரியார் காமராஜரை பச்சை தமிழன் என்றார். காமராஜரிடம் இருந்த பெருந்தன்மை அரசியல் பண்பாடு, அரசியல் நாகரீகத்தை என்றும் மறக்க முடியாது.

என் மகன் ஸ்டாலின் திருமண விழாவில் உடல்நிலை மோசமாக இருந்த வேளையிலும் சிரமத்தை பார்க்காமல் வந்து கலந்து கொண்டார். என் தாயார் அஞ்சுகம் அம்மையார் இறந்தபோது என் வீட்டுக்கு நான் செல்வதற்கு முன்பாகவே அன்றைய முதல்வராக இருந்த காமராஜர் வந்து காத்து நின்றார். தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்தபோது எவ்வளவோ விமர்சனம் செய்தும் அதை பெரிது படுத்தாமல் காமராஜர் தமிழர் பண்பாட்டு சின்னமாக விளங்கினார்.

தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி காமராஜர் பிறந்த தினம் கல்வி வளர்ச்சி தினமாக கொண்டாடப்படுகிறது. மத்திய மந்திரி ப.சிதம்பரம் மதுரையில் காமராஜர் பெயரில் கல்வி ஆராய்ச்சி பல்கலைக்கழகம் தொடங்க வேண்டும் என்று கூறினார். அவர் கோரிக்கையை ஏற்று கல்வி ஆராய்ச்சி பல்கலைக்கழகம் அமைக்கப்படும். அதற்கு வேண்டிய நிதியை நாங்களும் கொடுப்போம் மத்திய அரசிடமும் பெறுவோம்.

இவ்வாறு கருணாநிதி பேசினார்.

விழாவில் மத்திய மந்திரி ப.சிதம்பரம், காங்கிரஸ் மேலிட பார்வையாளர் வீரப்பமொய்லி, மத்திய மந்திரி இளங்கோவன், அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன், எம்.பி.க்கள் ஞானதேசிகன், கே.வி.தங்கபாலு, சுதர்சன நாச்சியப்பன், ஆரூண், எம்.எல்.ஏ.க்கள் சுதர்சனம், யசோதா, பீட்டர் அல்போன்ஸ், மாவட்ட தலைவர்கள் ராயபுரம் மனோ கோவிந்தசாமி, மங்கள்ராஜ், நிர்வாகிகள் கே.சிரஞ்சீவி, ஜோதி, தாமோதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முதல்-அமைச்சர் மற்றும் தலைவர்களுக்கு மேளதாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. எஸ்.ஜி.விநாயகமூர்த்தி வரவேற்றார். முடிவில் துணை மேயர் கராத்தே தியாகராஜன் நன்றி கூறினார்.

சத்தியமூர்த்தி பவனில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் காமராஜர் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இளைஞர் காங்கிரஸ் தலைவர் மïரா விஜயகுமார் தலைமையில் மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், சீருடைகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்ச்சியில் நிர்வாகிகள் பிஜுஜாக்கோ, காண்டீபன், கோபி, அமுல்பிரகாஷ், ஜிம்பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மாலை மலர் செய்தி

2 comments:

டண்டணக்கா said...

தேர்ந்தெடுத்த சரியான அறிவிப்பு, அந்த ஆராய்ச்சி பல்கலை கழகத்திற்க்கு காமராஜின் பெயர் தவிர வெறு எந்த பெயர் பொருந்தும்.
ம்ம்ம்.... வயது ஆக ஆக கருணாநிதியிடம் மாற்றங்கள்...
நன்றி என்னார் ஐயா.
-டண்டணக்கா.

ENNAR said...

காங்கிரஸ் காரர்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்க வில்லையென்றாலும் இப்படிபட்டதை கொடுத்து தொண்டர்ளை சமாதானப் படுத்துகிறாரோ என்னமோ!!!