Sunday, August 06, 2006

திப்புசுல்தான் ராக்கெட் பயன் படுத்தினார்

முதன் முதல் திப்பு தான் ராக்கெட் பயன் படுத்தினார்

1. ராக்கெட் தொழில்நுட்பத்தை கண்டு பிடித்தவர் திப்பு சுல்தான் பிரமோஸ் ஏவுகணை தயாரிப்பு மைய இயக்குனர் பேட்டி

ஸ்ரீரங்கபட்டினம் (கர்நாடகா) : "உலகிலேயே முதன் முதலில் ராக்கெட் தொழில்நுட்பத்தை கண்டு பிடித்தவர் மைசூர் புலி என போற்றப்பட்ட திப்பு சுல்தான் தான்,' என பிரமோஸ் ஏவுகணை தயாரிப்பு மையத்தின் முதன்மை நிர்வாகி சிவதாணு பிள்ளை கூறினார்.மைசூரை ஆண்ட வீர மிக்க மன்னர் திப்பு சுல்தான். போர்த் திறமை காரணமாக இவர் "மைசூரின் புலி' என மக்களால் போற்றப்பட்டார். கடந்த 1792ம் ஆண்டில் ஸ்ரீரங்கபட்டினத்தில் நடந்த போரில் பிரிட்டிஷ் படைகளை தோல்வியுறச் செய்தார். இவருடைய ஆட்சி காலத்தின்போது, போர்களில் ராக்கெட் தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டது தற்போது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து ஜனாதிபதி அப்துல் கலாமின் ஆலோசனையின் பேரில், பிரமோஸ் ஏவுகணை தயாரிப்பு மையத்தின் மேலாண்மை இயக்குனரும், முதன்மை நிர்வாகியுமான சிவதாணு பிள்ளை இது குறித்து ஆய்வு செய்வதற்காக நேற்று முன்தினம் திப்பு சுல்தானின் பிறந்த ஊருக்கு வந்தார். மைசூரில் உள்ள ராணுவ தளவாடங்கள் தயாரிக்கப்படும் பல்வேறு இடங்களுக்கு சென்று பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை எதிர்த்து வீரத்துடன் போரிட்டவர் திப்பு சுல்தான். உலகிலேயே முதல் முதலாக ராக்கெட் தொழில் நுட்பத்தை கண்டு பிடித்தவர் இவர் தான். இவர் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிரான போரில் இதனை பயன்படுத்தியுள்ளார். 250 மி.மீ., சுற்றளவுள்ள இந்த ராக்கெட், இரண்டு கிலோ எடையுள்ள வெடி மருந்துகளை நிரப்பி, 1.5 லிருந்து இரண்டு கி.மீ., தூரத்தில் உள்ள இலக்கை தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. இது தான் ராக்கெட் தொழில் நுட்பத்தின் ஆரம்ப கட்ட முயற்சி. பின்னர் ஒரே நேரத்தில் மூன்று ராக்கெட்டுகளை ஏவும் அளவிற்கு இதில் வளர்ச்சி பெற்றுள்ளனர். திப்பு சுல்தானின் ராக்கெட்டுகளால் பிரிட்டிஷ் படைகள் பல இழப்பை சந்தித்துள்ளன. நமது நாட்டில் தற்போது பயன்படுத்தப்படும் ஏவுகணை தொழில் நுட்பம் இதனை அடிப்படையாக கொண்டது தான். பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த ராக்கெட் தயாரிக்கும் எண்ணம் திப்பு சுல்தானுக்கும் அவரது படையினருக்கும் எப்படி ஏற்பட்டது என்பது மிகுந்த ஆச்சர்யம் தருவதாக உள்ளது. இந்த ராக்கெட் மாதிரிகள் எதுவும் தற்போது இந்தியாவில் இல்லை.

லண்டனில் உள்ள "ஊல்விச் பீரங்கி மியூசியத்தில்' திப்பு சுல்தான் பயன்படுத்திய ராக்கெட் மற்றும் அதன் சிறு பகுதிகள் வைக்கப்பட்டுள்ளன. பல நிறங்களில் வண்ணம் தீட்டப்பட்டுள்ள இந்த ராக்கெட் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது. இதனை நமது ஜனாதிபதியிடம் ஆச்சர்யத்துடன் தெரிவித்தேன். ராக்கெட் தொழில் நுட்பத்தின் பிறந்த ஊர் ஸ்ரீரங்கபட்டினம் என்பது மிகவும் பெருமை தருவதாக உள்ளது. தற்போது நமது நாட்டில் உள்ள முப்படைகளைப் போலவே, திப்பு சுல்தானும் ராக்கெட் தயாரிப்பிக்கு 27 படைப்பிரிவுகளை அமைத்துள்ளார். இதில், ஆறு ஆயிரம் பேர் இருந்துள்ளனர். திப்பு சுல்தானை எதிர்த்து பிரிட்டிஷ் படைகள் தோற்று ஓடியதற்கு இதுதான் முக்கிய காரணமாக இருந்துள்ளது. இவ்வாறு அவர்கள் தோற்று ஓடும்போது, ராக்கெட்டின் சில பகுதிகளை எடுத்துச் சென்றுள்ளனர். உலகம் முழுவதும் நடந்த போர்களில் பல்வேறு போர் முறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது வரலாறுகளில் மூலம் தெரிகிறது. இவற்றில் திப்பு சுல்தானின் பங்கு எளிதில் மறக்கமுடியாதது. அடுத்த மூன்று மாதங்களில், திப்பு சுல்தான் பயன்படுத்திய ராக்கெட் தொழில் நுட்பம் குறித்து ஆய்வு செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். திப்பு சுல்தான் ராக்கெட் பயன்படுத்தியது இத்தனை ஆண்டுகளாக வெளி உலகிற்கு தெரியாமல் இருந்தது வருத்தம் அளிப்பதாக உள்ளது.

இந்திய ரஷ்ய நாடுகளின் கூட்டு முயற்சியில் தயாராகும் பிரமோஸ் ஏவுகணையை மேலும் நவீனப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக முதலீடுகளை அதிகரிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரமோஸ் ஏவுகணையை ராணுவத்தில் சேர்ப்பதற்கான இறுதிக் கட்ட முயற்சிகள் நடந்து வருகின்றன. அடுத்த ஆண்டில் பிரமோஸ் ராணுவத்தில் சேர்க்கப்படும்.இவ்வாறு சிவதாணு பிள்ளை கூறினார்.

தினமலர்

http://www.dinamalar.com/2006july22/general_ind1.asp


No comments: